Monday, April 16, 2007
அட்சய திருதியை
ஆதிபகவன்
நிகழ்க்கால சமணத் தீர்த்தங்கரர்களில் முதல் தீர்த்தங்கரராக திகழ்பவர் ஆதிபகவன் என்றழைக்கப்படும் ரிஷபதேவராவார்.
இப்பரத கண்டத்தின் முதல் சக்கரவர்த்தியாக திகழ்ந்தவரும் இவரே ஆவார். இவர் காலத்தில் தான் போகபூமி, கருமபூமியாக
மாறியது. போக காலத்தில் மக்கள் உழைப்பு ஏதுமின்றி, கற்பக
மரத்தை நாடி வேண்டியதைப் பெற்று வாழலானார்கள்.
கர்ம பூமி
இவ்வாறாக மக்கள் எந்த உழைப்புமின்றி வாழ்ந்தக் காலத்தில் கற்பக மரங்கள் மறையத் தொடங்கின. இதனால், மக்கள் செய்வதறியாது, தங்களின் அரசனான ஆதிபகவனை அணுகி, தங்களுக்கு உதவுமாறு வேண்டிக் கொண்டனர். பகவானும் அவர்கள் நிலையுணர்ந்து ஆறு தொழில்களை கற்பித்தார். இதனால், அவர் யுகாதி நாதர் என்று அழைக்கப்படலானார். ஆறு தொழிற்களை கற்பித்த அந்த நன்னாள் யுகாதி என்று இன்றும் அழைக்கப்படுகிறது.
இந்நாட்டில் தோன்றிய எல்லா சமண இலக்கியங்களிலும் இச்செய்தியைக் காணலாம். தமிழில் தோன்றிய சமண இலக்கியங்களும் இதனை கூறுகின்றன. சீவக சிந்தாமணி, சூடாமணி நிகண்டு, திருக்கலம்பகம், ஆதிநாதர் பிள்ளைத்தமிழ் போன்ற நூட்களில் இச்செய்தி வருவதைக் காணலாம்.
விரிவஞ்சி, எடுத்துக்காட்டாக ஒன்றை ஈண்டு சுட்டுகிறேன்.
“ஒழியாக் கற்பத்தரு மருங்கி
உலகாம் போகபூ மியிடை
பழியாப் பிணங்கிமா நிலத்தோர்
பணிந்தே நிற்பக்கரந் தருளும்
உழவே தொழில் வணிக வரைவு
உற்ற சிற்பவித் தையினால்
அழியா வகை வந்தாட் கொண்டாய்
அடியோஞ் சிற்றலழி யேலே!
- ஆதிநாதர் பிள்ளைத்தமிழ்
துறவறம்
இவ்வாறாக உலக மக்களுக்கு முதன்முதல் ஆறு தொழில்களைக் கற்பித்ததால், இவருக்கு ஆதிபிரம்மா, யுகாதிநாதன், பிரஜாபதி, ஆதிதேவன், ஆதிநாதர், ஆதிராஜர், ஆதிபகவன், ஆதிசக்கரவர்த்தி போன்ற பல பெயர்களால் அழைக்கப்படலானார்.
குறளாசிரியர் தேவர் பெருமானும், இதனைக் குறிக்கவே முதல் குறளாக,
“அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு”
என்ற குறளினை அமைத்தமை இங்கு சிந்திதற்பாலது.
இல்லறத்தில் இன்பம் துய்த்து, சிறப்புற அரசாட்சி செய்து
வருங்கால், ஒரு நாள் அரண்மனையில், “நீலாஞ்சனை” என்னும் நாட்டிய பெண்ணின் நாட்டியம் அரங்கேற்றப்படுகிறது. அரங்கேற்றத்தின் பாதியிலேயே அப்பெண் அகால மரணம் அடைகிறாள். இதனால் அதிர்ச்சியுற்ற ஆதிராசருக்கு அக்கணமே
வைராக்கியம் ஏற்படுகிறது. தன் முதல் மகனான பரதனிடம் அரசாட்சியை ஒப்படைத்துவிட்டு, அரச வாழ்வைத் துறந்து துறவேற்கிறார்.
ஆகார தானம்
அவ்வாறு அரச வாழ்வைத் துறந்த விருஷபதேவர், நாட்டை விட்டு அகன்று காட்டில் வாழலானார். மெளனம் ஏற்றார். தொடர்ந்து ஆறு மாதங்கள் நின்ற வண்ணமே (கயோத்சர்கம்) தவம் ஏற்றலானார். ஆறு மாதங்கள் கழிந்தப் பிறகு ஆகாரம்
ஏற்க (பாராணை விதி) நாட்டுக்கு வருகிறார். மக்கள், இதற்கு முன்னர் துறவியர்களைக் கண்டதில்லையாதலால், ரிஷபநாதரை
இன்னும் அரசராகவே கருதி அவருக்கு தங்களிடம் உள்ள
விலை உயர்ந்த பொருட்களை அளிக்க முன்வந்தனர். இதனால்,
மீண்டும் தவத்தினைத் தொடரலானார். இவ்வாறாக மேலும் ஆறு மாதங்கள் கழியலாயின.
தான தீர்த்தங்கரர்
இங்கு ஒன்றைக் குறிப்பது நல்லது என்று நினைக்கிறேன். அதாவது, சமண துறவிகள் பாராணை செல்லும்போது எந்த இல்லறத்தான் வீட்டின் முன்பும் நிற்க மாட்டார்கள். அதுபோல் யாரிடமும் பேசவும் மாட்டார்கள். அவர்கள் தங்கள் வழியேச் செல்வார்கள். அத்துறவிகளைக் கண்ட இல்லறத்தான் தானே முன்வந்து அவர்களுக்கு ஆகாரத் தானம் கொடுக்க வேண்டுமேயன்றி துறவிகள் தாமாக யாரிடமும் சென்று உண்ண கூடாது என்பது சமணத் துறவிகளின் விதி. ஆகாரம் ஏற்கும்போது, நின்று கொண்டு தன் இருகைகளால்தான் உணவு ஏற்கவேண்டும். பாத்திரம் ஏதும் உபயோகப்படுத்தக் கூடாது.
அவ்விதியின்படி, மீண்டும் பாராணை ஏற்க அஸ்தினாபுரம் வருகிறார் விருடபதேவர். அச்சமயம், அந்நாட்டின் இளவரசனான, சிரேயாம்ச குமாரனுக்கு தான் முற்பிறவியில் துறவிகளுக்கு ஆகார தானம் கொடுத்த நினைவு ஏற்பட்டு, பாராணைக்காக வந்த விருஷபசுவாமிக்கு “கரும்பு சாற்றினை” அளிக்கிறான். இதனால் நாட்டு மக்கள் அனைவரும் மகிழ்ந்தனர். இளவரசன் சிரேயாம்ச குமாரன் பகவானுக்கு ஆகார தானம் அளித்ததால் “தான தீர்த்தங்கரர்” எனப் போற்றப்பட்டார்.
தான பூஜை
ஆதிபகவன் பாராணை மேற்கொண்டதை தன் அவதி ஞானத்தால் அறிந்த தேவேந்திரனும், இதர தேவர்களும் பெருமகிழ்ச்சியடைந்து, பஞ்சாச்சரியம் பொழிந்தனர். அப்பொழுது விழுந்த விலையுயர்ந்த இரத்தின, மாணிக்க கற்களை, மக்கள் தங்கள் வீடுகளுக்கு அள்ளிச் சென்றனர். சிரேயாம்ச குமாரன் ஆகாரதானம் அளித்த அந்த நன்நாளே அட்சய திருதியாகவும் ஆகாரதானம் போற்றும் நாளாகவும் போற்றப்படுகிறது.
அட்சயதிருதியை
அட்சயதிருதியின் நோக்கமே பிறருக்கு தானங்கள் கொடுக்கவேண்டும் என்பதுதான். குறிப்பாக சொல்ல வேண்டுமானால் இல்லறத்தானின் (சிராவகத்தான்) கடமைகளில் ஒன்றான துறவறத்தாரை ஆகார தானத்தால் தாங்குதல் ஆன “விருந்தோம்பலை”க் குறிப்பதாகிறது. ஆனால், அதுவே பின்னாளில் நோக்கம் மாறி தேவர்களால் பொழியப்பட்ட விலையுயர்ந்த நகைகளை மக்கள் தங்கள் வீடுகளுக்கு அள்ளி சென்றதை எடுத்துக்கொண்டு விட்டார்கள். அதன் அடிப்படையில் அன்றைய தினம் நகை வாங்கினால் செல்வம் பெருகும் என்ற நினைப்பில் செயல்பட தொடங்கிவிட்டார்கள்.
தானம் போற்றுவோம்
பண்டிகைகளின் உண்மையான நோக்கத்தை அறிந்து, ஏழைகளுக்கு தம்மால் முடிந்ததைக் கொடுத்து உதவுங்கள். அதனால் அவர்கள் மனம் குளிர்ந்தால், தன்னாலேயே நம் செல்வம் பெருகும். அப்படி முடியாதவர்கள் ஏழை சிறுவர்களுக்கு கரும்புச் சாற்றினையாவது கொடுத்து "அட்சயதிருதியை" கொண்டாடுங்கள்.
- இரா. பானுகுமார், சென்னை
Wednesday, January 24, 2007
வாலறிவன்
பிறவியும் ஞானமும்
உயிர்கள் தத்தம் ஊழ்வினைப் பயனால் எண்ணற்ற ஆண்டுகள், பல பலப் பிறவிகளில்(1) உழன்று, பின் தன் நன்முயற்சியால் அவ்வினைகளை உதிர்த்து வீடு பேறு அடைகின்றன. அவ்வுயிர்கள் தன் வினைக் கட்டுகளிலிருந்து விடுபட்டு, வரம்பற்ற ஞானத்தில் திளைக்க, வழிக்காண முயன்றவர்கள் தான் தீர்த்தங்கரர்கள். "தீர்த்தங்கரர்" என்றால் கடலைக் கடக்க உதவுபவர்கள் என்று பொருள். அஃதாவது, பிறவி என்னும் கடலைக் கடக்க தெப்பமாக(2) /புணையாகவிருந்து உதவுபவர்கள். இவர்களையே சமணர்கள் தங்கள் கடவுளாகக் போற்றி வணங்கி வருகிறார்கள். இவர்களே தொழத்தக்கவர்கள் ஆவர்.
குணஸ்தானப் படிகள்
வீடுபேறு என்பது நாம் விரும்பிய உடனே கிடைக்கக்கூடியதல்ல. உயிர் வீடுபேறு அடைய வேண்டுமானால் தன் வினைக்கட்டுகளிலிருந்து விடுபடவேண்டும். அப்படிவிடுபட்ட உயிரே வீடு நிலை எய்தி வரம்பற்ற ஞானத்தில்(3) திளைக்க முடியும் என்பது சமணரின் கோட்பாடாகும்.
உயிர்கள் எண்ணற்ற பிறவிகளில் உழன்று, தன் முயற்சியில் தாழாது, படிப்படியாக தான், அந்த வரம்பற்ற முழுதுணர் ஞானத்தை பெற முடியுமேயன்றி, வேறு "சக்தி"(4)யுடைய உந்துதலாலேயோ, துணையாலேயோ வீடுபேறு அடைய முடியாது.
உயிர்கள் மும்மணிகளான, "நற்காட்சி", "நல்ஞானம்","நல்லொழுக்கம்", என்னும் மூன்று மணிகளைப் பற்றி படிப்படியாகத் தான் வீடுபேறு அடைய முடியும். உயிர் படிப்படியாக முன்னேறுவதை, சமணத்தில் "குணஸ்தானம்" என்பார்கள்.
ஞானம் அல்லது அறிவு
சமண கொள்கைப்படி ஞானம் (அறிவு) ஐந்து வகைப்படும்.
1. மதி ஞானம் - இயற்கையான அறிவு அல்லது ஐம்பொறியினால் அறியும் அறிவு.
2. சுருத ஞானம் - ஆகம அறிவு அல்லது நூற்களால் ஏற்படும் அறிவு.
3. அவதி ஞானம் - முற்பிறவிகளை அறியும் அறிவு.
4. மனப்பர்யாய ஞானம் - பிறர் மனதில் உள்ளதை அறியும் அறிவு.
5. கேவல ஞானம் - முழுதுணர் ஞானம் அல்லது மூன்று உலகங்களையும், மூன்றுக் காலங்களையும் ஒருங்கே அறியும் அறிவு.
குணஸ்தானத்தில் கடைசி நிலை "தீர்த்தங்கர" நிலை. இக்கடைசி நிலையடைந்த உயிரே கேவல ஞானம் பெற்று திகழ முடியும். இந்த கேவல ஞானத்தை அடைந்தவர்களையே "தீர்த்தங்கரர்கள்" என்று போற்றப் படுகிறார்கள். இவர்களே சமணர்கள் வழிப்படும் கடவுளர்களாம். ஈங்கு ஒன்றை நினைவில் இருத்திக் கொள்ளவேண்டும். எந்த உயிரும், முயன்றால், "தீர்த்தங்கரர்" நிலை எய்த முடியும். அஃதாவது "கடவுளாகவே" ஆக முடியும். ”முடியும்” என்று ஒற்றை வார்த்தையில் சொல்லிவிட்டாலும், பிறவி என்னும் கடலைக் கடக்க, பிறவிகள் கோடானகோடி பிறவிகளை எடுக்க வேண்டியிருக்கும் என்பதை ஈண்டு நினைவில் வைத்தல்வேண்டும். இந்த இடத்தில்தான் சமணம் மற்ற சமயங்களில் இருந்து மிகவும் வேறுபடுகிறது. ஏனைய சமயங்கள் உயிர்கள் கடவுளை அடைவதைத்தான் வீடுபேறு என்று சாற்றுகின்றன.
கேவல ஞானம்
பிராகிருத (பாகதம்) பெயரான "கேவல ஞானம்" என்பதற்கு தமிழில் "கடையிலா அறிவு","அறிவுவரம்பற்ற", "முழுதுணர் ஞானம்", "வினையின் நீங்கி விளங்கிய அறிவு", அலகிலா அறிவு", "முற்றறிவு", ”தூய அறிவு” என்று பொருள்.
இக்கேவல ஞானத்தையே திருக்குறள் ஆசிரியர் தேவர், "வாலறிவன்" என்று போற்றி புகழ்கிறார். அந்த குறள் இதுதான்.
"கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நல்தாள் தொழாஅர் எனின்" - திருக்குறள்
வாலறிவன் = வால்+அறிவன். "வால்"(5) என்பதற்கு "Greatness, Abandance,Purity, Last" என்று ஆங்கிலத்தில் பொருள் வரும். வாலறிவு என்பதற்கு "முழுதுணர்ந்த அறிவு" என்றும் "முற்றும் உணர்ந்த அறிவு" என்றும் "கடையிலா அறிவு" என்றும் தூய அறிவு என்றும் பொருள் படும். அவ்வாறே, வாலறிவன் என்பதற்கு கடையிலா ஞானத்தை உடையவன் எனவும், முழுதுணர்ந்த அறிவன் எனவும், அறிவுவரம்பு உடையவன் எனவும் பொருள் படும். வாலறிவு என்பதற்கு "மெய்யுணர்வு" என்று ஈங்கு பொருள் கொள்வது பொருந்தாது!
சமண இலக்கியத்தி வாலறிவு
வாலறிவு என்ற சொற்றொடரை எடுத்தாளும் சமண இலக்கியங்களையும் இங்கு பார்ப்போம்!
1. கடையிகந்த காட்சியொடு கடையிகந்த வாலறிவன் – திருக்கலம்பகம்
2. இலங்கொளி முக்குடை எந்திரத் தியங்க
அறிவன் சரிதம் முறையிற் காட்டி – பெருங்கதை
3. அறிவினாலறியாத அறிவ நீ – மேருமந்தர புராணம்
4. உலகமூன்று பொருங்குட மேத்துமாண்
திலகமாய திற லறிவன்னடி – வளையாபதி
5. பொங்கு சாமரை யேந்திப் புடைபுடை யியக்கர்நி றிரட்டச்
சிங்க வாகனத் திருந்து தெளிந்தொரளி மண்டில நிழற்றத்
திங்கண் முக்குடை கவிப்பத் தேவர்தந் திருந்தவை தெருள
வங்க பூவம தறைந்தா யறிவர்தம் மறிவர்க்கு மறிவா - (நீலகேசி - 157)
இன்னும் நிறைய இலக்கியச் சான்றுகள் கொடுக்கமுடியும் விரிவஞ்சி இங்குக் கொடுக்கப்படவில்லை!
அறம் மறவற்க!
அறமல்லது துணையில்லை!!
இரா.பானுகுமார்,
சென்னை.
குறிப்புகள்:
1. "தொல்லை நம்பிறவி எண்ணின்
தொடுகடல் மணலும் ஆற்றா எல்லைய" - சீவக சிந்தாமணி
2. "ஆழ்கடற் புணையின் அன்ன அறிவரன் சரண் அடைந்தான்" - சீவக சிந்தாமணி
3. "அறிவன், அறவோன் அறிவுவரம்பு இகந்தோன்" - சிலப்பதிகாரம்
4. "தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூகி தரும்" - திருக்குறள்
5. தமிழ் அகராதி
Monday, January 22, 2007
நீலகேசியின் நையாண்டி!
நீலகேசியின் நையாண்டி!
"நீலகேசி" என்னும் நூல், ஐஞ்சிறுங் காப்பியங்களில் ஒன்றெனப் போற்றப்படுகிறது. இந்நூல் தருக்க வகையைச் சார்ந்தது. இதன் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. இந்நூலுக்கு "சமய திவாகர வாமன முனிவர்" என்பார் உரை எழுதியுள்ளார். இந்நூல் "குண்டலகேசி" என்னும் பெளத்த நூலுக்கு மறுப்பாக எழுந்த சமண நூல். இதன் காலம் யாது என்பதை திட்டவட்டமாக அறிய முடியவில்லை. இதன் எழுத்தமைதிக் கருதி இதனை கி.பி. நான்கு அல்லது ஐந்தாம் நூற்றாண்டு எனக் கருத இடமிருக்கிறது.
கதை சுருக்கம்:
"நீலகேசி" என்பவள் திருவளங்காடு பக்கத்தில் இருக்கும் பழையனூர் என்னும் ஊரில்வசித்து வந்த பேய். அப்பேய், சமண முனிவரான முனிசந்திர முனிவர் என்பவரிடம், சமண ஆகமங்களைக் கற்று, "திருவறம்" என்று அழைக்கப்படும் சமண அறத்தை நிலை நாட்ட உறுதிப் பூணுகிறாள். அவ்வாறே, மற்ற சமயத்தாரிடம் முன் சென்று அவர்களிடம் வாதுசெய்து, சமண அறத்தை நிலை நாட்டுகிறாள். இதுதான் "நீலகேசி"யின் கதைச் சுருக்கம்.
இங்கு ஒன்றைக் குறிக்க நினைக்கிறேன். இது சமய வரலாற்றாய்வில் மிகவும் முக்கியமானஒன்று. அது யாதெனின், நீலகேசி மற்ற சமயங்களிடம் வாது செய்தாள் என்று பார்த்தோம். அந்த சமயங்களாவன,
1.பெளத்தம்,
2.ஆசிவகம்,
3.சாங்கியம்,
4.வைசேடிகம்,
5.வேத மதம்,
6.பூத வாதம்.
மேற்குறிப்பிட்ட பட்டியலில், தற்போது பெருஞ்சமயங்களாக இருக்கும் சைவம், வைணவம் குறிக்கப்படவில்லையே என்ற கேள்விதான் அது? ஏன் குறிக்கப்படவில்லை. சிந்திக்க வைக்கும் கேள்விதான்? இல்லையா!
அக்கேள்விக்கு விடை பிறகுப் பார்ப்போம்.
"தீர்த்தன் திருநாமம் கொள்ளாத தேவுளவோ"!
முழுப்பாடல் விவரம்:
"பூர்ப்பம் பயந்தான் புகன்ற சுதக்கடலுட்
சார்த்திப் பிறவாத் தவநெறிக டாமுளவோ
சார்த்திப் பிறவாத் தவநெறிக டம்மேபோற்
றீர்த்தன் றிருநாமங் கொள்ளாத தேவுளதோ" - நீலகேசி (661)
"பூர்ப்பம் - பூர்வ+ஆகமம்,
சுதக்கடல் = சுருதக் கடல் = ஆகமக்கடல்".
- அருக பகவான் கூறிய ஆகம நெறிகளை (ஒழுக்க நெறிகளை) மற்ற சமயத்தார் எடுத்தியம்பிக் கொண்டது போல் அவனுக்குறிய திருநாமங்களைக் கூட தத்தம் கடவுளருக்குச் சூட்டிக் கொண்டார்கள் என்பது தான் மேலே சொன்ன பாடலின் பொருள்.
"தீர்த்தன் திருநாமம் கொள்ளாத தேவு (தெய்வம்) உளதோ" என்ற அடியில் பொதிந்திருக்கும் இலக்கிய நையாண்டிக் குறிப்பிடத்தக்கது.
இந்த அடியைப் படிக்கும் போதெல்லாம், தொல்காப்பியம், திருக்குறள், சிலப்பதிகாரம், வளையாபதி, திவாகர நிகண்டு, பிங்கல நிகண்டு போன்ற சமண நூற்களை, பின்னாளில், வலிந்து பொய்சமய சாயம் பூசியதையும், பிற்காலத்தில் சமணத் திருப்பதிகளை பிற சமயத் திருப்பதிகள் ஆக்கியதையும் இங்கு குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை.
அம்மட்டோ, அருகன் திருப்பெயர்களைக்கூட பிற சமயத்தவர் உள்வாங்கி தத்தம் கடவுளருக்கு சூட்டிக் கொண்டதும் இங்கு நினைக்க வேண்டியிருக்கிறது.
காட்டாக, "திருக்குறளில்" கடவுள் வாழ்த்தில் வரும் "எண்குணன்" என்ற சொல்லை எடுத்துக்கொள்வோம். இப்பெயர் அருகனுக்கு வழங்கும் சிறப்பு பெயர்களில் ஒன்று. திருக்குறள் எழுந்தக் காலத்தில் அப்பெயர் அருக பகவானுக்கு வழங்கி வந்திருக்கிறது. சான்றாக, இளங்கோவடிகள் தாம் எழுதியச் சிலப்பதிகாரத்தில் - குமரவேல் முருகக் கடவுள், பிறவா யாக்கை பெரியோனான சிவபெருமான், வானளந்த திருமால் போன்ற பல கடவுளர்களை புகழ்ந்துப் பாடல்கள் எழுதியிருக்கிறார். ஆனால், வேறெந்த கடவுளுக்கும் "எண்குணன்" என்ற சொல்லைப் பயன் படுத்தாமல், அருகக் கடவுளுக்கு மட்டுமே பயன் படுத்துகிறார்.
மேலும், ஆரணி போளூர் வட்டத்தில் "திருமலை" என்ற மலை இருக்கிறது. இம்மலையில் 22ஆவது தீர்த்தங்கரரான "நேமிநாத சுவாமி"யின் 13அடி சிலையிருக்கிறது. இம்மலைக்கு"எண்குண இறைவன் குன்றம்" என்று பெயர்.
இம்மலையின் மற்ற பெயர்கள், கீழ்வரும் சுட்டியில் கண்டு கொள்க.
( http://www.treasurehouseofagathiyar.net/33000/33015.htm )
( http://www.treasurehouseofagathiyar.net/37100/37126.htm )
அவ்வண்ணமே "சூடாமணி நிகண்டு" அருகக் கடவுள் பெயர் தொகுதியில் "எண்குணன்"என்ற பெயரைச் சொல்கிறது. மற்ற சமயக் கடவுளர்க்கு அப்பெயர் சொல்லப்படவில்லை என்பது சிந்திதற்பாலது.
சூடாமணி நிகண்டில் கடவுள் பெயர் தொகுதியை கீழே வலைச்சுட்டியில் பார்க்கவும்.
( http://www.thamizham.net/super/nikandu01.htm )
ஆனால், பின்னாளில் "எண்குணன்" என்ற சொல்லை, மற்ற சமயத்தாரும் உள்வாங்கிக் கொண்டு தத்தம் கடவுளருக்கு சூட்டிக் கொண்டனர்.
இரா.பானுகுமார்,
சென்னை.
Monday, December 18, 2006
நா. முத்து நிலவன் கருத்துக்கு மறுப்புரை
18.12.2006 - Monday
திருக்குறள் பற்றிக் கவிக்கோ அப்துல் ரகுமான் சொல்வது சரிதானா ? - சரி தான். திருக்குறள் ஒரு சமண நூல்தான்!
இரா. பானுகுமார்,
சென்னை.
____________________________________________
கவிக்கோ அப்துல் ரகுமான் "திருக்குறள் ஒரு சமண் நூல்" என்று சொன்னதற்கு மறுப்பாக திருவாளர். நா.முத்து நிலவன் என்பார் எழுதியதிற்கு என் மறுப்பை பின்னூட்டாக எழுதுகிறேன்.
நா.முத்து நிலவன் எழுதிய மறுப்புரையை இங்கே பார்க்கலாம்.http://www.thinnai.com/?module=displaystory&story_id=60408055&format=html
திருக்குறள் ஒரு சமண நூல்தான்!
>>>>>>>>>>>>>>"*புத்தனுக்குரிய 'பகவன் ' எனும் சொல்லை முதல் குறளிலேயே வழங்கியிருக்கும் திருக்குறள் சமண நூலாகுமா ?"என்று வினவுகிறார்.<<<<<<<<<<<<<<
என் பதில்:
"பகவன்" என்ற சொல் அருக பகவானுக்கு வழங்கப்படவில்லையா? எல்லா தமிழ் நிகண்டுகளும் "அருகனு"க்கும் "பகவன்" என்ற பெயர் உண்டு என்று பறைச்சாற்றுகின்றன! ஆனால், தாங்கள் அச்சொல் புத்தனுக்கே உரியது என்கிறீர்கள். முதல் குறளில் உள்ள "பகவன்" என்ற சொல்லை மட்டும் எடுத்துக் கொண்டு ஒரு முடிவுக்கு வர முடியாது. அக்குறளில் உள்ள "ஆதிபகவன்" என்ற சொற்றொடரைச் சேர்த்துப் பொருள் கொள்ளவேண்டும். அச்சொற்றொடருக்கு "ஆதியில் தோன்றிய பகவன்" அல்லது "முதல் பகவன்" என்று பொருள் வரும். இப்படிப் பொருள் கொண்டால், திருக்குறளில் வரும் பகவன் என்ற சொல் புத்தரைக் குறிப்பதாகாது.
அச்சொல் புத்தரைத்தான் குறிக்கும் என்றால், அக்குறளில் பொருள் குற்றம் ஏற்படும். புத்தபெருமான் இவ்வுலகின் கண் தோன்றிய முதல் "பகவன்" என்றாகிவிடும். அதற்கு பெளத்த இலக்கியங்களில் சான்றில்லாமையாலும் மற்றும் சத்தியபிரமாணம் இல்லாமையாலும் பெறப்படும். மாறாக, புத்தர் பெருமான் தோன்றுவதற்கு முன்னமே அருகர்கள் (சமண தீர்த்தங்கரர்கள்) தோன்றியுள்ளார்கள் என்பது வரலாறு. இதை பெளத்த இலக்கியங்களும் அரண் செய்யும். மேலும், கடைசி தீர்த்தங்கரராக போற்றப்படும் "வர்த்தமான மகாவீரர்", புத்தரைவிட காலத்தால் மூத்தவர் என்பதனாலும் இது உறுதிப்படும். இதனால், புத்தரை "ஆதிபகவன்" என்ற சொற்றொடர் குறிக்கா என்பதும் பெறப்படும்.
சரி! அச்சொற்றொடர் யாரை குறிக்கிறது? எனில்! சமணத்தின் முதல் தீர்த்தங்கரரான "ஆதிபகவன்" என்றழைக்கப்படும் "ஆதிநாத"ரைத் தான் அச்சொற்றொடர் குறிக்கும். சமண வரலாற்றின்படி நிகழ்க்கால தீர்த்தங்கரர்கள் இருபத்துநால்வர். அதில், முதல் தீர்த்தங்கரராகக் கருதபடுபவர் "ரிஷபதேவர்" என்று அழைக்கப்படும் "ஆதிபகவன்" ஆவார். இருபத்துநான்காவது சமண தீர்த்தங்கரர் "வர்த்தமான மகாவீரர்". இவர் புத்தபெருமானின் சமக்காலத்தவர் எனபதும் கருத்தில் கொள்ளவேண்டும்.
இதையே சற்று விரிவாகப் பார்க்கலாம். அஃதாவது, "அகர முதல எழுத்தெல்லாம்" என்ற அடியை நோக்கும்போதுஅகரம் எழுத்துக்கெல்லாம் முதலாக வருவதுபோல் முதல் தீர்த்தங்கரரான "ஆதிநாதர்" மற்ற தீர்த்தங்கரர்களுக்கு முதலாக உள்ளார் என்பதுவும் சிந்திதற்பாலது. இதற்கு சான்றாக கீழ் வருவனவற்றைக் காணலாம்.
"தத்வார்த்த சூத்திரம்" என்னும் சமண நூலுக்கு "அகளங்க தேவர்" என்னும் சமணப் பன்மொழிப் புலவர் உரையெழுதியிருக்கிறார். அவர் 11ஆம் சூத்திரத்திற்கு உரையெழுதுகையில்,
"அகாரா தயோ வர்ணா ரிஷபா தயஸ் தீர்த்தகரா இதி"
என்னும் சுலோகத்தை மேற்கோள் காட்டுகிறார்.
இதற்கு, "எழுத்துக்கள் அகரத்தை முதலாக உடையன,தீர்த்தங்கரர்களில் விருஷப தேவரை முதலாக உடையவர்" என்று பொருள். இந்த சூத்திரம் அப்படியேதிருக்குறளின் முதற்ப் பாட்டாக வருவதும் என் கருத்தை அரண் செய்யும்.
"ஆதிபகவன்" என்ற சொற்றொடரை அப்படியே எடுத்தாளும் மற்ற சமண தமிழ் நூற்களை கீழே காணலாம்.
1. "ஆதிபகவனை அருகனை மாதுயர் நீங்க வழுத்துவம் பலவே" - திருக்கலம்பகம்
2. "ஆதிபகவன் அசோக வசலன் சேதிபமுதல்வன் சினவரன் தியம் பகன்" - திருப்பாமாலை
3. "அத்தனே என்னை ஆளிர் சரணம் ஆதி பகவன் அருளே சரணம்" - தோத்திரத் திரட்டு
4. "செறிவன் சினேந்திரன் சித்தன் பகவன் தரும முதல்வன் தலைவன் தருமன்" - சிலப்பதிகாரம்
இதுபோல் "ஆதிபகவன்" என்ற சொற்றொடரை ஆளும் பெளத்த நூற்களையோ, அல்லது மற்ற சமய நூற்களையோசுட்டினால், அது ஒரு நல்ல கருத்துப் பரிமாற்றத்துக்கு வழிவகுக்கும்.
>>>>>>>>>>>" 'பகவான் ' என்பது, பின்னர் வைணவம் வளர்ந்த பிறகு 'உட்கவரப்பட்ட ' ஒரு சொல். (இதே பெயர் சமணருக்கும் உண்டெனினும், அது புத்தருக்குரியதுபோலப் பிரதானமான பெயரல்ல என்பது கவனிக்கத்தக்கது) ">>>>>>>>>>>
என் பதில்:
மேலே சொன்ன கருத்துக்கள் மூலம் திருக்குறளில் வரும் "பகவன்" என்ற சொல் இங்கு "சமண கடவுளான அருகனையே" சுட்டும் என்பதும் "ஆதிபகவன்" என்ற சொற்றொடர் அருகனைத்தவிர மற்ற கடவுளைக் குறிக்கா என்பதுவும் உள்ளங்கை நெல்லிக்கனி.
>>>>>>>>>>>" * 'அறிவன் '- எனும் நேரடித் தமிழாக்கமும் புத்தருக்கே உரியது."<<<<<<<<<<<
என் பதில்:
இவ்வாறு "Sweeping statement" ஆக சொல்வதின் மூலம் தங்களுக்கு சமண நூற்களில் பயிற்சி இன்மையைத்தான்காட்டுகிறது. "அறிவன்" என்ற சொல் அருக பகவானுக்கும் உண்டு. அவற்றையும் ஈண்டு காட்டுதும்.
1. " கடையிகந்த காட்சியொடு - கடையிகந்த வாலறிவன்" - திருக்கலம்பகம்
2. " இலங்கொளி முக்குடை யெந்திரத் தியங்க அறிவர் சரிதம் முறையிற் காட்டி" - பெருங்கதை
3. " அறிவினாலறியாத அறிவநீ" - மேருமந்திர புராணம்
4. " உலகமூன்று பொருங்குட னேத்துமாண் டிலகமாய திற லறிவன்னடி" - வளையாபதி
5. " அறிவன் அறவோன் அறிவுவரம்ப இகந்தோன்" - சிலப்பதிகாரம்
என்று சமண இலக்கியங்கள் பேசுவதன் மூலம் "அறிவன்" என்பது சமண கடவுளுக்கும் உண்டு என்பதாகிறது.
>>>>>>>>>>>>" * 'மலர்மிசை ஏகினான் ' - என்பதுகூட அப்பட்டமாக புத்தரையே குறிப்பதாகத் தெரிகிறது. (புத்தரின் பாதங்களில் தாமரை மலர் போலும் சக்கரச் சின்னம் இருந்ததான பழங்கதைகள் பலவுண்டு. புத்தரின் பட்டப் பெயரான 'ததாகதா ' என்பதற்கு 'இவ்விதம் சென்றவன் '-ஏகியவன்- என்பது பொருள்) "<<<<<<<<<<<<
என் பதில்:
இதுவும் தங்களின் ஒருமுகமான "Sweeping statement" தான். "மலர்மிசை ஏகினான்" என்ற சொற்றொடர் அருகருக்கும் உண்டு.
1. " விரிபூந்தாமரை மேற்சென்ற திருவாரடி யேந்தி" - சீவக சிந்தாமணி
2. " விரைமணந்த தாமரைமேல் விண்வணங்கச் சென்றாய்" - சூளாமணி
3. " பூவின்மேல் சென்றான் புகழடியை" - அறநெறிச்சாரம்
4. " பூவின்மேல் வந்தருளும் புங்கவன்றன் பொற்பாதம்" - நேமிநாதம்
5. " மருவார் மலர்பிண்டி மன்னா நமஸ்தே வண்டாரு மலர்மேல் நடந்தாய் நமஸ்தே" - தோத்திரத்திரட்டு
6. " மலர்மிசை நடந்தோன் மலரடி அல்லதென்" - சிலப்பதிகாரம்
என்பதன் மூலம் அருகருக்கும் அப்பெயர் உண்டென்றாகிறது.
சிரமண மதப் பிரிவுகளில் மிக முக்கியமானதாக கருதப்படும் மதங்கள் சமணம், பெளத்தம், ஆசிவகம் என்பன.இவற்றுள் சமணமே (ஜைனம்) காலத்தால் முந்தியது. சமணத்தில் இருந்தே பெளத்த, ஆசிவக மதங்கள்தோன்றின. அதனால் சமணத் தாக்கங்கள் பெளத்ததிலும், ஆசிவகத்திலும் உண்டு. சிறு, சிறு வேறுபாடுகள் உண்டெனினும் அவைகள் ஒரே பாரம்பரியத்தில் இருந்து வந்ததுதான். சில பல காரணங்களால் ஆசிவகம்தற்போது அடியோடு மறைந்துவிட்டது. அதே போல், பெளத்தம் பாரத மண்ணில் நிலைப்பெற முடியாமல், நம்பக்கத்து தேசங்களில் (சீனம், திபேத்து, இலங்கை, பர்மா, தாய்லாந்து) நிலைப்பெற்றது. ஆனால் ஒரு காலத்தில்பெருசமயமாக இருந்த சமணம் தற்போது சிறுபான்மை சமயமாகக் குன்றிவிட்டது.
ஆங்கிலேயர்கள் காலத்தில் மேற்கத்திய ஆராய்ச்சியாளர்களின் பார்வை பெளத்தம் மேல் பட்டதன் விளைவாகபெளத்த மதத்தைப் பற்றி நிறைய ஆராய்ச்சி நூற்கள் எழுதப்படலாயின. இதன் காரணமாக பெளத்தம் பற்றிஉலகளாவியப் பார்வை ஏற்பட்டது. இது நல்லதுதான். என்றாலும், அந்த ஆராய்ச்சியை நிறைய அறிஞர்கள்வேறு கோணத்தில் புரிந்துக்கொண்டனர். அப்புரிதல் சில விளைவுகளை ஏற்படுத்தியதை நாம் உணர மறந்துவிட்டோம். அந்த விளைவுகள் தான் இன்றளவும் ஆராய்ச்சி உலகில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவருகின்றன.
>>>>>>>>>>>>"(1)துறவறத்தை வற்புறுத்திய சமணத்துக்கு மாறாக,இல்லறத்தைப் பாடிய திருக்குறள் சமண நூலாகுமா ? குறளில், சமணம் போன்ற 'கெடுபிடி ' நடைமுறை இல்லை. புத்தம் போன்ற 'ஜனநாயக ' மரபே அதிகம். டுமாடுகளைப் பலிகொடுக்கும் வைதீக வேள்விக்கு எதிராக 'தன்னைக் கட்டும்தவம் ' வலியுறுத்தப் பட்டது -சமணத்தில். அதைக்காட்டிலும், குடும்பவாழ்க்கையே பெரிதென்று கூறிய குறள் எப்படி சமண நூலாக முடியும் ? (காதலுக்கென்று மூன்றில் ஒருபகுதி நூலையே ஒதுக்கி காதலைப் பாடியது சமணக் கோட்பாடா என்ன ?)"<<<<<<<<<<<<
என் பதில்:
இவ்வாறு சொல்வதன் மூலம் தாங்கள் நேரிடையாக சமணம் பற்றியறியவில்லை என்பது புலனாகிறது. மற்றவர்ஆராயாமல் சொன்ன கருத்துக்களை அப்படியே இங்கே சொல்கியிருக்கிறீர்கள் என்பது அங்கை நெல்லிக்கனி. பாரதவரலாற்றில் முதன்முதலில், இல்லறம் என்றும் துறவறம் என்றும் பிரித்து மகக்ளை நல்வழிப்படுத்தியவர்கள் சமணர்களேஆவர். இல்லறம் இல்லையேல் துறவறம் பயனற்றது என்று துணிந்து சொன்னவர்கள் சமணர்களேயாவர்.
"சோலைதாழ் பிண்டிக்கீழ்ச் சூழ்ந்தவர்தம் சொல்முறையான் மனையறமுந் துறவறமும் மன்னவர்க்கும் விண்ணவர்க்கும் வினையறுக்கும் வகைதெரிந்து வீடொடு கட்டியை யுரைத்த தொன்மைசால் மிகுகுணத் தெம் துறவரசைத் தொழு தேத்த நன்மைசால் வீடெய்து மாறு" -யாப்பருங்கலக்காரிகை மேற்கோள் உரை
இல்லறத்தைப் போற்றி தமிழிலும், வடமொழிகளிலும் நிறைய சமண நூற்கள் எழுந்திருக்கின்றன. உதாரணமாக,தமிழில் தோன்றிய அறநெறிச்சாரம், அருங்கல செப்பு போன்ற நூற்களும் சிராவகச்சாரம், சமணசுத்தம் போன்ற வடமொழிநூற்களையும் சொல்லலாம்.
சான்றாக ஒன்றைப் பார்போம்:
" நோற்பவர் இல்லவர்க்குச் சார்வாகி இல்லவரும்
நோற்பவர்க்குச் சார்வாய் அறம்பெருக்கி - யாப்புடைக்
காழும் கிடுகும்போல் நிற்கும் கயக்கின்றி
ஆழிசூழ் வையத்து அறம்" -அறநெறிச்சாரம்
இல்லற நோன்பிகள் இல்லாமல் துறவிகள் தத்தம் கடமையை ஆற்ற முடியாது. அதுபோல் துறவற விரதிகள் வழிக்காட்டுதல்இல்லாமல் இல்லறம் முறையாக நடைபெறா என்பதைத்தான் மேற்சொன்ன பாடல் இயம்புகிறது. எனினும், இல்லறத்தார்க்குவீடுபேறு இல்லாமையால், வீடுபேறு வேண்டுவோர் துறவறம் மேற்கொள்ளவேண்டும் என்றுதான் சமணம் சொல்கிறது.
அதனால்,சமணம் இல்லறத்தை வெறுத்தது என்றால் எப்படி? :-)
திருக்குறளும் இவ்வுண்மையையே பகர்கிறது. இல்லறத்திலேவீடுபேறு அடையலாம் என்று எந்தக் குறள் சொல்கிறது சொல்லுங்களேன்.
மேலும், தாங்கள் "குறளில், சமணம் போன்ற 'கெடுபிடி ' நடைமுறை இல்லை. புத்தம் போன்ற 'ஜனநாயக ' மரபே அதிகம்"என்று எழுதியிருக்கிறீர்கள்.
தேவர் (குறள் ஆசிரியர்) கொல்லாமை, புலால் மறுத்தல், தவம், கூடா வொழுக்கம் போன்ற அதிகாரங்களில் சமண கெடக்குப்பிடிநிறையவே கையாண்டிருக்கிறார். விரிவஞ்சி விடுக்கிறேன்.
"(காதலுக்கென்று மூன்றில் ஒருபகுதி நூலையே ஒதுக்கி காதலைப் பாடியது சமணக் கோட்பாடா என்ன ?)" என்றும் எழுதியிருக்கிறீர்கள்.
சிவக சிந்தாமணியை யார் எழுதியது ஐயா. அதற்கு மணநூல் என்ற பெயரும் உண்டு இல்லையா? (ஹி..ஹி...)
>>>>>>>>>>>(2) 'உழவே செய்யக்கூடாது - செய்தால் அது தொடர்பான உயிர்களை அழிக்கவேண்டி வரும் ' என்பது சமணக் கோட்பாடு. எனில், 'உழவே தலை ' என்ற குறள் எப்படிச் சமண நூலாக முடியும் ? இவை போலும் கேள்விகள் ஏராளம் ஏராளம்! <<<<<<<<<<
என் பதில்:
என்னடா வம்பா போச்சு? உழவே செய்யக்கூடாது என்று எந்த தமிழ் சமண இலக்கியத்தில் இருக்கிறது. முதன்முதலில் வாழ்வியலை "இல்லறம்" என்றும் "துறவறம்" என்று பிரித்தது சமணம் என்று முன்னமே சொல்லியிருக்கிறேன்.
புலால் உடன்பாடென்றானால், செத்தது, சாவாதது, ஓடுவது, ஒடாதது, பறப்பது, பற்ப்பாதது (:-), நடப்பது, நடப்பாதவது என்று எல்லாத்தையும் ஒரு கைப் பார்க்கலாம். ஆனால், இல்லறத்தாராகட்டும், துறவிகளாகட்டும் இருசாராருமே புலால மறுத்தவர்கள். இல்லறத்தார் உழவு செய்யவில்லையென்றால் அவர்களுக்கு புவா (உணவு) எங்கிருந்து கிடைக்குமாம்?.
முதன்முதல் இவ்வுலகிற்கு அறம் உரைத்தவர் முதல் சமண தீர்த்தங்கரரான "ஆதிபகவன்" என்றழைக்கப்படும்"ரிஷபதேவரே ஆவார். அவரே அறுதொழில்களை வகுத்தவர்.
வாள், வரைவு, வாணிபம், உழவு, கல்வி மற்றும்சிற்பம் என்பனதான் அவைகள்.
"வரைவொடு தொழிலே வித்தை வாணிகம் உழவே சிற்பம் உரைசெய்யும் போகபூமி யொழிவினி லாதிகாலம் விரைசெறி பிண்டிவேந்தன் விதித்த லினஃதேயம்ம கருமபூமி என்னும்பேர்கண்ட தொன்றுண்டுநூலில்" -சூடாமணி நிகண்டு
என்ற பாடலின் மூலம் அதையறியலாம். இதனால் சமணர்கள் உழவை ஆதரித்தார்களேயன்றி உழவு செய்யக்கூடாது என்று யாங்கணும் சொல்லவில்லை என்பது நிதர்சணம்.
தாழ்மையுடன்,
இரா.பானுகுமார்,
சென்னை.
மின்னஞ்சல்: